இருவருக்கும் வசதிப்படும் ஒரு நாளில் சந்திப்போம்: விக்கிக்கு எழுதிய நன்றிக் கடிதத்தில் ஜெயலலிதா – JM MEDIA.LK

இருவருக்கும் வசதிப்படும் ஒரு நாளில் சந்திப்போம்: விக்கிக்கு எழுதிய நன்றிக் கடிதத்தில் ஜெயலலிதா

நடந்து முடிந்த 2016 தமிழக சட்டப்பேரவை தேர்தல் வெற்றியையொட்டி வாழ்த்துத் தெரிவித்த இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரனுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

” 2016 – தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலில் வெற்றி பெற்றதையொட்டி முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்துக் கடிதம் அனுப்பிய, இலங்கை வடக்கு மாகாண முதல்-அமைச்சர் நீதியரசர் விக்னேஸ்வரனுக்கு நன்றி தெரிவித்து முதல்- அமைச்சர் அனுப்பிய கடிதத்தின் விவரம் பின் வருமாறு:-

‘‘அண்மையில் நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் நான் பெற்ற வெற்றி குறித்த உங்களது பாராட்டுக் கடிதத்திற்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழக மக்களின் தொப்புள் கொடி உறவுகளான இலங்கைத் தமிழர்கள் நலன் காக்க, அவர்கள் உரிய நீதியைப் பெற என்னால் இயன்ற நடவடிக்கைகளைக் கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாட்டின் முதல்- அமைச்சர் என்ற முறையில் நான் எடுத்துள்ளேன்.

இலங்கை வடகிழக்கு மாகாணத் தமிழர்கள் உரிய நீதியைப் பெறும் வகையில் இந்திய அரசின் மூலம் தொடர்ந்து நடவடிக்கைகள் எடுப்பேன் என்பதை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகம் மற்றும் இலங்கை வடகிழக்கு மாகாணத் தமிழர்கள் உறவு மேலும் வலுவடையும் வகையில் என்னை சந்திக்க நீங்கள் விழைவதுக் குறித்து மிக்க மகிழ்ச்சி. இருவருக்கும் வசதிப்படும் ஒரு நாளில் நாம் நிச்சயம் சந்திக்கலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்களது நல்வாழ்த்துகளுக்கு மீண்டும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. (A)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *