இராணுவ சதியை முறியடிக்க வீதியில் இறங்கிய துருக்கி மக்கள்: 161 பேர் உயிரிழப்பு, 2000 பேர் கைது – JM MEDIA.LK

இராணுவ சதியை முறியடிக்க வீதியில் இறங்கிய துருக்கி மக்கள்: 161 பேர் உயிரிழப்பு, 2000 பேர் கைது

ஒரு சில மணித்தியாலங்கள் துருக்கியின் ஜனநாயக ஆட்சி இராணுவமயப்படுத்தப்பட்டு மக்கள் பலத்தினால் மீண்டும் அங்கு ஜனநாயக ஆட்சி ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

இஸ்தான்புல் நகரின் விமான நிலையம் அருகில் உள்ள வீதியில் அமைந்துள்ள இரண்டு பாலங்கள் அந்நாட்டு இராணுவத்தினரால் நேற்று (15) பிற்பகல் திடீரென மூடப்பட்டது.

துருக்கி ஜனாதிபதி டையிப் ஏர்டோகான் துருக்கியின் மாமரிஸ் நகருக்கு விடுமுறைக்காக சென்றிருந்த சந்தர்ப்பத்தில் இந்த சதி முயற்சி இடம்பெற்றது.

அவர் மீண்டும் வருவதைத் தடுப்பதே இராணுவத்தின் நோக்கமாக இருந்தது என்பது இன்று காலை முழு உலகுக்கும் தெரிய வந்தது.

நாட்டில் ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்தை நிலைநாட்டுவதற்காக நாட்டைத் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்ததாக துருக்கியில் இராணுவ சதிப் புரட்சியை மேற்கொள்வதற்கு தலைமை தாங்கிய தலைவர்கள் அறிக்கையொன்றின் மூலம் அறிவித்திருந்தனர்.

எனினும், துருக்கி ஜனாதிபதி உடனடியாக தனது கையடக்க தெலைபேசி மூலம் தொலைக்காட்சிகளில் தோன்றி மக்களுக்கு அறிக்கையொன்றை விடுத்தார்.

நாட்டை சீர்குலைக்கும் சக்திகளுக்கு எதிராக வீதியில் இறங்குமாறு மக்களிடம் அவர் கோரிக்கை விடுத்தார்.

அதன் பின்னர் குறுகிய நேரத்திற்குள் ஜனாதிபதி இஸ்தான்புல் நகரை நெருங்கினார்.

ஏர்டோகான் தங்கியிருந்த மாமரிஸ் நகரில் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அவர் குறுகிய நேரத்திற்குள் இஸ்தான்பூல் நகரை நெருங்கியமையினால் உயிர் தப்பினார்.

இராணுவ ஆட்சி நிலவிய குறுகிய காலத்தில் அங்காரா நகர், பாராளுமன்ற சுற்றுவட்டம், ஜனாதிபதி அலுவலகம் மீது குண்டுத் தாக்குல்கள் மேற்கொள்ளப்பட்டன.

ஜனாதிபதியின் அழைப்பிற்கு ஏற்ப மக்கள் வீதியில் இறங்கி தமது பலத்தை வெளிப்படுத்தியமையினால் இராணு சதிப் புரட்சியில் ஈடுபட்ட இராணுவத்தினர் பின்வாங்க ஆரம்பித்தனர்.

விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தாக்குல் வாகனங்களைக் கூட அங்கிருந்து அகற்றும் அளவிற்கு மக்களின் பலம் சக்தி மிக்கதாக அமைந்திருந்தது.

இறுதியில் சதியில் ஈடுபட்ட இராணுவ தலைமை அதிகாரிகள் சரணடைந்தனர்.

இராணுவ சதிப் புரட்சி ஏற்பட்டு ஒரு சில மணித்தியாலங்களில் ஏற்பட்ட மோதல்களின் போது 161 பேர் உயிரிழந்துள்ளனர்.

சதித்திட்டத்துடன் தொடர்புடைய இராணுவத்தினர் உள்ளிட்ட 2000 க்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *